மயிலத்தமடு பண்ணையாளர்கள் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு
மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் நேரில் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
மயிலத்தமடு பகுதியில் சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொலிஸ் பிரிவினர் தங்களை அச்சுறுத்துவதுடன், தாங்கள் அமைத்துள்ள வாடிகளை உடனடியாகப் பிரித்துச் செல்லுமாறு வற்புறுத்துவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் காடழிப்பு காரணமாக கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தங்களின் கால்நடைகள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், அவ்வாறான சம்பவங்களுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
பண்ணையாளர்களுடனான சந்திப்பின்போது, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மகாவலி மற்றும் வனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து நாளை மயிலத்தமடு பகுதிக்கு நேரில் சென்று கள நிலவரத்தை ஆராய்ந்து, உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
எனினும், தங்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை இந்த உறுதியை தற்காலிக ஆறுதலாக மட்டுமே ஏற்றுக்கொள்வதாக மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் சங்கத் தலைவர் சின்னத்தம்பி நிமலன் உள்ளிட்ட பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.