சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கொட்டகலையில் இரத்ததான முகாம்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கொட்டகலை “எம்.எஸ். இன்ஸ்டிடியூஷன் – தி ஸ்கூல் ஆஃப் இங்கிலீஷ்” ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நேற்று (2) கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகமுமான புஷ்பா விஷ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததான முகாமை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி வைஷ்ணவி சிவதாணு, இயக்குநர் எஸ். சிவதாணு, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சமூக நலனை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

