வல்லையில் கோர விபத்து; பூசகர் ஒருவர் உ**யிரிழப்பு.!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை வெளிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வல்லை முனியப்பர் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் வீதியில் ஏறிய இளைஞன் ஒருவரின் உந்துருளி, அப்பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பூசகரின் உந்துருளியுடன் மோதியுள்ளது.
இதன்போது உந்துருளியில் இருந்து பூசகர் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவருக்குப் பின்னால் வந்த பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதனால் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்த பூசகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டமையால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
சம்பவ இடத்துக்கு விரைந்த நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், உயிரிழந்த பூசகரின் சடலத்தை மீட்டுப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


