யாழில் எழுச்சியாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்.!
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது.
தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றது.
நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
12 நாட்களுக்கு உணவையும் நீரையும் மறுத்து, 1987 செப்டம்பர் 26 அன்று அவர் தனது உயிரை தியாகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தியாக தீபத்தின் வரலாற்றை எடுத்துக் காட்டும் வகையில் வீதி நாடகம் ஒன்றினையும் ஆற்றினர்.




