தியாக தீபத்தின் நினைவையொட்டி யாழ். பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு.!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றையதினம் கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்வின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு கோப்பாய் பொலிஸார் தடை விதித்தனர். ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் உரிய அனுமதி பெறுமாறு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாணவர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அனுமதி கோரிய போதிலும், பொலிஸார் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் இத்தகைய தடைகளுக்கு மத்தியிலும், மாணவர்களும் சமூகப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து தங்களின் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை அமைதியான முறையில் தொடர்ந்து முன்னெடுத்தனர்.





