சவுதியில் அனுஜனுக்கு எதிரான வழக்கு: இலங்கை அரசு தீவிர கண்காணிப்பு
சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் கூற்றுப்படி, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இவ்வழக்கின் முன்னேற்றங்களைப் பின்பற்றி வருவதோடு, கொழும்பிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.
இராஜதந்திர வழிகள் ஊடாகச் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனுஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த இலங்கைப் பிரஜைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.