திருக்கோவில் பிரதேசத்தில் பசுமையை நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரநடுகை நிகழ்வு
“வளமான நாடு – அழகான வாழ்வு”, “புனருதயே புரவர – புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் உள்ளூராட்சி வாரம் – 2026 நிகழ்வுகளின் மூன்றாம் நாள் நிகழ்வு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் மரநடுகையை முன்னிலைப்படுத்தி திருக்கோவில் பிரதேச சபையில் நடைபெற்றது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஒழுங்கமைப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில் இன்று (16) காலை 10.00 மணிக்கு பிரதேச சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
“சுற்றாடல் மரநடுகை தினம்” மற்றும் “சர்வதேச ஓசோன் படலப் பாதுகாப்பு தினம்” ஆகியவற்றை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், உத்தியோகத்தர்கள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சுற்றாடலை பாதுகாப்பதன் அவசியம், மரநடுகையின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால சந்ததிக்காக பசுமையான சூழலை உருவாக்க வேண்டியதன் தேவை தொடர்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டன.
மேலும், பிரதேசத்தை பசுமையானதாக மாற்றுவதில் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய பங்கு தொடர்பிலும், சுற்றாடலை மாசுபடுத்துவதைத் தவிர்த்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் விளக்கமளித்தார்.
நிகழ்வின் நிறைவாக, கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், மரநடுகை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
பசுமையானதும் அழகானதுமான திருக்கோவில் பிரதேசத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, உள்ளூராட்சி வாரத்தின் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.













