காஸாவில் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை இஸ்ரேல் அழிக்கிறது?
காஸாவில் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளை (Rubble) அகற்றுவது அங்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை அழித்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், காஸாவில் போர் குற்றங்களுக்கான ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளும், நிறுவனங்களும் சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக நேரிடும் என்று,ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ் (Francesca Albanese) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னதாக, காஸாவில் உள்ள இடிபாடுகளை அகற்றுவது, கடந்த கால நிகழ்வுகளை மறைப்பதற்கும், நீதி பெறுவதற்கான ஆதாரங்களை அழிப்பதற்குமான ஒரு முயற்சியாக இருக்கக்கூடும் என்று யூரோ-மெத் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Euro-Med Monitor) கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தது.
இடிபாடுகளுக்கு அடியில் 8,000-க்கும் மேற்பட்டோர் புதைந்திருக்கலாம் என்று பாலஸ்தீன அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, உடல்களை மீட்கத் தேவையான கனரக இயந்திரங்கள் மற்றும் தடயவியல் பொருட்களை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருகிறது.
இதற்கு மத்தியிலும், காஸா நகரின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட 60 சிறுவர்கள் உட்பட சுமார் 100 பேரின் உடல்களுக்கு வடக்கு காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகளை நடத்தினர்.
இதேவேளை, முறையான உபகரணங்கள் கிடைத்தால் 90 நாட்களில் இடிபாடுகளுக்குள் இருக்கும் உடல்களை மீட்க முடியும் என்று காஸாவின் குடிமைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.