கலிபோர்னியாவில் டிரம்ப் வருகைக்கு முன் பரபரப்பு: கோல்ஃப் மைதானத்தில் சந்தேக நபர் கைது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிபோர்னியாவில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்திற்கு வருவதற்கு முன்னதாக, அந்த வளாகத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான ஜீனைன் ஜான் டேல் (Jeanine John Taele) என்ற சந்தேக நபர், கலிபோர்னியாவின் ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் உள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் மைதானத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி ஷெரிப் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கோல்ஃப் மைதானம் முழுவதும் சுற்றித் திரிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, பாதுகாப்புத் திட்டங்களைக் கண்காணிப்பது போல் நடந்து கொண்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண உடையில் இருந்த கூட்டாட்சி அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமான நபர் குறித்து அளித்த தகவலின் பேரிலேயே காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவரைச் சோதனையிட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்று, சட்டவிரோத தோட்டாக்கள் மற்றும் 16 தோட்டாக்களைக் கொள்ளக்கூடிய மேகசின் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவரது வாகனத்திலிருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மற்றொரு கைத்துப்பாக்கியும் கூடுதல் தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் எல் செகுண்டோ காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் தேடப்பட்டு வந்த நபர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க ரகசிய புலனாய்வுச் சேவையும் (US Secret Service) ஆதரவளித்து மேல் விசாரணை நடத்தி வருவதுடன், எதிர்காலத்தில் மேலதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை அதிபர் டிரம்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பகமான ஆதாரங்கள் எதுவும் வெளிவரவில்லை என்றும், பொதுமக்களுக்கு உடனடியாக எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஷெரிப் திணைக்களம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


