உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன் – ஷேக் ஹசீனா அதிரடி!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
64 பார்வைகள்

பங்காளதேஷில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்களின் விளைவாக ஆட்சியை இழந்து, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான முன்னாள் பிரதமர் மற்றும் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா, “நான் இந்த ஆண்டே எனது தாய்நாட்டிற்குத் திரும்புவேன்” என்று அதிரடியாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

பிரத்தியேக நேர்காணலில் அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்காளதேஷுக்கு திரும்புவது என்பது தனது தனிப்பட்ட அரசியல் ஆசைக்கானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஷேக் ஹசீனா, அது பங்காளதேஷ் மக்களின் அரசியல் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுத்தல் மற்றும் விடுதலைப் போரின் உன்னத நோக்கம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்றார்.

“நான் அதிகாரத்திற்காக அரசியல் செய்பவள் அல்ல. பங்காளதேஷ் மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் தந்தை பங்காபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் ‘சோனார் பங்களா’ என்ற கனவை நனவாக்குவதற்காகவுமே நான் அரசியல் செய்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பங்காளதேஷில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையானது முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் அரசியல் பழிவாங்கல்களைக் கொண்டது என அவர் சாடியுள்ளார்.

அவாமி லீக் கட்சியைத் தலைவர்கள் இல்லாத ஒரு அமைப்பாக மாற்றுவதற்காக, நீதித்துறை இங்கு அரசியல் பழிவாங்கலுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் இதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்டன.

அவை அப்போதும் தோற்றன, இப்போதும் தோற்கும்.  நான் மரணத்திற்கு அஞ்சமாட்டேன் என்று அவர் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தனது வருகைக்குப் பின்னர் கட்சியின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது குறித்துப் பேசிய அவர், அவாமி லீக் என்பது வெறும் காகிதத்திலான அமைப்பு அல்ல என்று கூறினார். அது வங்காள மண்ணிலும், மக்களின் வரலாற்றிலும், அடையாளத்திலும் ஆழமாக வேரூன்றிய ஒரு அரசியல் சக்தி என அவர் வர்ணித்தார்.

தனது 77 ஆண்டுகாலப் பயணத்தில், அவாமி லீக் கட்சி பலமுறை தாக்கப்பட்டது, பலமுறை இரத்தம் சிந்தியது மற்றும் பலமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் மக்களின் பலத்தோடு அது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பங்காளதேஷில் தாரிக் ரஹ்மான் தலைமையில் அமைந்துள்ள பிஎன்பி அரசாங்கத்திற்கு ஷேக் ஹசீனா முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

நாட்டில் முறையான ஜனநாயகச் சூழலையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டவிரோதத் தடையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

சோடிக்கப்பட்ட போலி வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

நாட்டில் அமைதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளையே அவர் முன்வைத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

75 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0