சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் வடக்கு மாகாண ஆளுநரினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்குக் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நகரில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குச் சாவகச்சேரி வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணைப் பரிந்துரையின் அடிப்படையில், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் கிசோர் மற்றும் வவுனியா மாநகர சபையின் மேயர் காண்டீபன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்த பின்னணியிலேயே இந்த அவசர எதிர்ப்பு நடவடிக்கை சாவகச்சேரியில் வெடித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாகச் சாவகச்சேரி வர்த்தகர் சங்க வட்டாரங்கள் விடுத்துள்ள அவசர வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எமது மண்ணின் மக்கள் பிரதிநிதியான சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சையான பதவி நீக்க நடவடிக்கை நியாயமற்றதாகும். இதற்கு எமது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்வதுடன், பாதிக்கப்பட்ட எமது பிரதிநிதிக்கு முறையான மற்றும் நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
மண்ணின் நீதிக்கான இந்த அறப் போராட்டத்தில் எந்தவொரு இன, மத அல்லது மொழி பேதங்களும் இன்றி, சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தகப் பெருமக்களும் தங்களது கடைகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை முழுமையாக மூடி, எமது எதிர்ப்பை அரசுக்கும் ஆளுநருக்கும் காட்ட வேண்டும். எமது மண்ணின் உரிமைக்காக நாளை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் இந்த முழுமையான கதவடைப்புப் போராட்டத்துக்கு அனைவரும் தங்களது பேராதரவை வழங்க வேண்டும்” என்று அந்த வேண்டுகோளில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தகர்களின் இந்தத் தீர்மானம் காரணமாக நாளை சாவகச்சேரி நகரின் வழமையான வர்த்தகச் செயற்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் என்பன ஸ்தம்பிதமடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நகர்ப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்படலாம் எனத் தெரியவருகின்றது.










