இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) ஜனாதிபதியின் உரைக்குப் பதிலளித்துப் பேசும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்தவித பாகுபாடுமின்றித் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நிற்கிறது.
இவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடைய எவருக்கும் எமது கட்சியில் இடமில்லை. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜனாதிபதி கூறுவதை நாம் நிராகரிக்கிறோம். போதைப்பொருளை ஒழிப்பதற்கு நீதியும் சட்டத்தின் ஆட்சியும் நிலைநாட்டப்பட வேண்டும்.”எனத் தெரிவித்தார்.
தற்போதைய போதைப்பொருள் அச்சுறுத்தல் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் இளைய தலைமுறையினரைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, மக்களின் வரிப்பணத்தில் சிறையில் அடைக்கப்படும் அதேவேளை, அவர்கள் சிறையிலிருந்தபடி தங்களது கடத்தல் வலையமைப்பைத் தொடர்ந்து இயக்குவதற்கு இடமளிக்கக் கூடாது என எச்சரித்தார்.
இவ்வாறான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்குச் சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற கடுமையான தண்டனை முறைகளை இலங்கையில் இப்போது செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும், போதைப்பொருளை ஒழிப்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பும் எதிர்க்கட்சியின் கோரிக்கையுமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்










