டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் நிதி இடைவெளிகள் தொடர்பில் முறையான துறைசார் ஆய்வு மேற்கொள்ளுமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புரவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதுடன், புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விடயத்தை அடுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குமாறு, அக்குழுவின் தவிசாளருக்கும் பாராளுமன்று உறுப்பினரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான விசேட நிதி ஒதுக்கீடு கோரல் எனத் தலைப்பிட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
2024ஆம் ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலின் பேரழிவால் நாட்டின் ஏனைய பிராந்தியங்களைப் போலவே வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பெருமளவிலான அரச பாடசாலைகள் கடுமையான கட்டமைப்புச் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
அனர்த்தம் ஏற்பட்டு நீண்டகாலம் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட பல பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டடங்கள், கூரைகள், சுற்றுச்சுவர்கள், முறையான நீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னமும் முழுமையாக மீள் கட்டமைக்கப்படாமல் தொடர்ந்தும் முடங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.
தற்போது சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பராமரிப்புப் பணிகள், ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறுதிருத்த நிதி உதவியின் ( MRC ) ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் புயலால் ஏற்பட்ட சேதங்களின் பாரதூரதன்மையோடு ஒப்பிடுகையில் இத்தகைய வழக்கமான வருடாந்த நிதி ஒதுக்கீடுகள் எவ்வகையிலும் போதுமானதாக அமையவில்லை.
இந்நிலைமையானது மாணவர்களின் அன்றாட பாதுகாப்பு, ஆரோக்கியமான கற்றல் சூழல் மற்றும் கல்விச்சேவைகளின் தரம் ஆகியவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பாதிப்படைந்த 15 பாடசாலைகளுக்கு இன்னமும் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான நிதி உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.
வவுனியா தெற்கு வலயத்தில் வ/குருக்கள் புதுக்குளம் அ.த.க.பாடசாலை, வ/முஸ்லீம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும், மடு கல்வி வலயத்தில் மன்/கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும், மன்னார் கல்வி வலயத்தில் இசைமலைத்தாழ்வு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, மடுக்கரை அ.த.க.பாடசாலை, நொச்சிகுளம் அ.மு.க. பாடசாலை, ஜோசப் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் உடனடி தலையீட்டுடன் சீர் செய்யப்படவேண்டிய பாடசாலைகளாக காணப்படுகின்றன.
எனவே கல்விச் சமூக நலன்கருதி, இப்பிரச்சினையில் தங்களின் விசேட தலையீட்டை வழங்கி தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய தேவை மற்றும் நிதி இடைவெளிகளை மீளாய்வு செய்யுமாறும் இதுவரை நிரந்தரமாக திருத்தப்படாத பாடசாலைகளின் விபரப் பட்டியலை பெற்று இயல்தகு விரைவில் குறித்த பாடசாலைகளின் உட்கட்டமைப்புகளை முழுமையாக சீரமைப்பதற்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டை ஏற்படுத்துமாறும் தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மேற்படி விடயம் தொடர்பில் தங்களின் சாதக பரிசீலிப்பையும் உடன் தலையீட்டையும் எதிர்பார்க்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் நிதி இடைவெளிகள் தொடர்பில் முறையான துறைசார் ஆய்வு மேற்கொள்ளுமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சியிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தவகையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் தொடர்பான மாவட்டவாரியான துல்லியமான தரவுகள், இப்பணிகளுக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி விபரங்களின் வெளிப்படைத்தன்மை, இன்னமும் முழுமைப்படுத்தப்படாது நிலுவையில் உள்ள நீண்டகால கட்டுமானப் பணிகள், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின் போது பாடசாலைகளைப் பாதுகாப்பதற்கான அனர்த்த மீட்பு நிதி ஏற்பாடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் முறையான ஆய்வை மேற்கொள்ளுமாறும் அதனூடாக தொடர்புடைய கொள்கைவழி, நிருவாகப் பரிந்துரைகளை அரசுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம்பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விடயத்தை அடுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்ட நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்குமாறு, குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தவிசாளரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் பகுதியளவான பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பராமரிப்புப் பணிகள், ஆண்டுதோறும் வழங்கப்படும் சாதாரண சிறுதிருத்த நிதியுதவியின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவின் அளவோடு ஒப்பிடுகையில் இத்தகைய வழக்கமான ஒதுக்கீடுகள் எவ்வகையிலும் போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய கள நிலவரம், மாவட்ட வாரியாக கணக்கிடப்பட்ட சேத விபரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகள், பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள், இன்னமும் முழுமைப்படுத்தப்படாது நிலுவையில் உள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள், டித்வா புயலின் பின்னரான பாடசாலைகளின் மீள்கட்டுமானத்துக்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டுக்கான தேவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வதற்கும் உரிய தீர்வுகளை எட்டுவதற்கும் கல்வி அமைச்சு சார் ஆலோசனைக்குழுவின் அடுத்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறித்த விடயத்தை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அக்கடித்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















