இலங்கை நீதிமன்றங்களினால் பகிரங்கமாகச் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் ஒருவர் மிக விரைவில் சட்டபூர்வமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்படுவார் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
அதேபோல், இலங்கையில் பல்வேறு குற்றங்களை இழைத்துவிட்டு, நீதிமன்றப் பிடியாணைகளில் இருந்து தப்புவதற்காக வெளிநாடுகளுக்குத் தப்பியோடிப் பதுங்கியுள்ள அனைத்துக் குற்றவாளிகளையும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய விசேட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு மிக முக்கியமான விவரங்களை வெளியிட்டார்.
அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றியதாவது:-
“எமது நாட்டில் இலஞ்சம், பாரிய நிதி ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள், போதைப்பொருள் கடத்தல் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் எனப் பலதரப்பட்ட குற்றவாளிகளையும் தராதரம் பாராது கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவர்களில் பலருக்கு எதிராக முறையான விசாரணைகளுக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பலருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிலருக்கு நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாம் நிரபராதி என நிரூபிக்கத் தேவையுடையவர்கள், தாராளமாக நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்கான சட்டப் போராட்டங்களைத் தொடர முடியும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவுடன் பலர் மிக சாதுரியமாக வெளிநாடுகளுக்குத் தப்பியோடி அங்கு சொகுசாகப் பதுங்கிக் கொள்கின்றனர்.
அவ்வாறு இங்கு உத்தியோகபூர்வமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சர்வதேச ரீதியில் ‘சிவப்பு பிடியாணை’ பிறப்பிக்கப்பட்ட முக்கிய நபர் ஒருவர் தற்போது அமெரிக்காவில் சென்று பதுங்கியிருக்கின்றார். அவர் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். எத்தகைய இராஜதந்திர அழுத்தங்கள் வந்தபோதிலும், நிச்சயம் அவர் எமது நாட்டுக்கு முறையாக அழைத்து வரப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுவார் என்பதை நான் இந்த உயரிய சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.
இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காகப் பலமுறை அழைக்கப்பட்டிருந்த நிலையிலும், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி இலங்கைக்கு வருவதைத் தொடர்ச்சியாகத் தவிர்த்து அமெரிக்காவில் தங்கியிருந்தார்.
இதனையடுத்தே அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பகிரங்க சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில், இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றியுள்ள இந்த அதிரடி உரையானது, அமெரிக்காவில் இருக்கும் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்குக் கொண்டு வந்து கைது செய்யும் அரசின் இராஜதந்திர நகர்வுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதை உணர்த்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.










