டெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.
மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்ச டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாணந்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பியகம ஆகிய பகுதிகளிலும் டெங்கு வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, கண்டி, இரத்தினபுர மற்றும் களுத்துறை மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட நிபுணர் டொக்டர் பிரஷில சமரவீர (Prashila Samaraweera) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தலையீடு மற்றும் தொடர்ச்சியான டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இருந்தபோதிலும், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதில் சமூகத்தின் அலட்சியம் ஒரு பெரும் சவாலாக நீடிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால், இந்த வார இறுதியில் தங்கள் சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு டொக்டர் சமரவீர பொதுமக்களை வலியுறுத்தினார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 45,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.









