மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக பொது சுகாதார பரிசோதகர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நிலையத்தில் பனங்கள்ளு பயன்படுத்தி சில பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த பொருட்கள் தயாரிப்பில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்கள் குறித்த பகுதியில் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கப்படும் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













