அமெரிக்க – ஈரான் பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து பயணம்!
லெபனானில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தச் சூழலைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இடைக்காலப் போர் உடன்படிக்கையை ஒரு நிரந்தர பிராந்திய ஒப்பந்தமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப் (Steve Witkoff) மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) ஆகியோர் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே ஏற்பட்ட போர்நிறுத்தமே, தள்ளிப்போயிருந்த இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்குக் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இந்தச் சுவிட்சர்லாந்து சந்திப்பில் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.