உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோட்டா ஒன்லைனில் சாட்சியமளிக்க வேண்டும் என்ற உத்தரவு நீதிக்கான போராட்டத்தின் முதலாவது வெற்றி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
155 பார்வைகள்

இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி, கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரப்பட்டு வரும் வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவானது நீதிக்கான போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றியாகும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்நிலை ஊடாகவாவது நீதிமன்றத்தில் முன்னிலையாகி, இவ்வழக்குத் தொடர்பாகச் சாட்சியமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த காலங்களில் இலங்கையானது முழுமையான அரச அனுசரணையுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை அநியாயமாகக் காணாமல் ஆக்கிய ஒரு ‘குற்றவியல் நாடாகச்’ செயற்பட்டது.

குறிப்பாக, 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளதாக, அரசால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே அதிகாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட பொதுமக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் வடக்கு மற்றும் கிழக்கில் தீவிரமாகப் போராடிக் குரல் எழுப்பியவர்களே லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவராவர். ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய இந்த இரு மக்கள் தலைவர்களுமே அன்றைய அரச இயந்திரத்தால் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி, இந்தக் கடத்தல்களுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியங்களும் திட்டமிட்ட முறையில் மூடிமறைக்கப்பட்டன.

மக்களைக் கடத்தி, கடத்தப்பட்டவர்களுக்காகப் போராடியவர்களையும் கடத்தி, பின்னர் அதற்குரிய சாட்சியங்களையும் அழித்த அன்றைய அரசாங்கம், இறுதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கையும் கூட இல்லாமல் செய்யவே கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினூடாக முயன்றது. எனினும், வழக்குகளையோ அல்லது சாட்சியங்களையோ இனிமேலும் மறைக்கவோ, அமுக்கவோ முடியாது என்பதை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தனது தீர்க்கமான உத்தரவின் மூலம் இன்று உறுதிப்படுத்தியுள்ளதுடன், வழக்கை முடக்குவதற்குப் போடப்பட்ட சதிகளையும் முறியடித்துள்ளது.

இவ்வழக்கில் லலித், குகன் ஆகிய இருவர் மட்டுமன்றி, கடந்த காலங்களில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மேலும் 50 இற்கும் மேற்பட்டோரின் விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகச் சாட்சியமளிப்பதன் மூலம், இந்தச் சட்டவிரோதமான கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் படுகொலைகள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் எனப் போராடும் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.

நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவானது நீதிக்கான போராட்டத்தில் கிடைத்துள்ள ஒரு சாதகமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாகும். இந்த நீதிக்கான போராட்டத்தை நாம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியான மக்கள் போராட்டங்களாகவும் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து முன்னெடுப்போம்.

கோட்டாபய ராஜபக்ஷ உரிய சட்ட நடைமுறைகளின்படி நீதிமன்றத்தின் முன் சாட்சியமளித்தே தீர வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

114 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

132 0 0
இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

127 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0