“வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. இதற்காக இந்தியாவுக்கு வடக்கு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விசேட நிகழ்வும், ஆளுநரின் உரையும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளின் பின்னர் அதிதிகள் ஆலய வழிபாடுகளில் பக்திபூர்வமாக ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேலும் குறிப்பிடுகையில்,
“வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலாவிகளும் பெருமளவில் வருகைதரும் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேஸ்வரம் ஆலயம் இங்கு அமைந்துள்ளது.
இந்தியாவிலிருந்து வந்த மாருதப்புரவீகவல்லி இளவரசி, இங்குள்ள புனித தீர்த்தத்தில் (கீரிமலை ஊற்று) நீராடி தன் குறை நீங்கி, மாவிட்டபுரம் ஆலயத்தை எழுப்பி வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இத்தகைய மிக நீண்ட பண்டைய வரலாற்றையும் புகழ்பெற்ற புனித தீர்த்தத்தையும் கொண்ட இந்த ஆலயத்துக்குக் கடந்த 2015ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் வந்திருந்த போது வருகை தந்திருந்தார்.
இந்திய அரசு வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் ஏனைய வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகின்றது. வடக்கு மாகாணத்தில் உள்ள மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்ட இந்திய வீட்டு வசதித் திட்டத்தை நாம் எப்போதும் நன்றியோடு நினைவுகூர்வோம். இதன் மூலம் இன்று பல குடும்பங்கள் நல்ல உறுதியான வீடுகளில் பாதுகாப்பாக வாழ முடிகின்றது. நான் அந்தக் காலகட்டத்தில் முல்லைத்தீவில் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியதால் இதனை நேரில் கண்டு நன்கு அறிவேன். இந்திய அரசின் இந்த மகத்தான பங்களிப்பை வடபகுதி மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
இதுமட்டுமன்றி, ரயில்வே மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மன்னார் மருத்துவமனை மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் இந்தியாவின் பங்களிப்போடு நடந்துள்ளன. மேலும் சில மருத்துவமனைத் திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன.
கடல் அலைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேஸ்வரம் ஆலயத்தின் குடிதண்ணீர் தேவைக்கு உங்களது ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த வரலாற்றுப் பூமியின் மேம்பாட்டுக்காக உதவும் இந்தியாவுக்கு, வடக்கு மாகாண மக்கள் சார்பாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளிக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.
இங்கு உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர், வடக்கு மக்களுடன் இந்தியா கொண்டுள்ள வரலாற்று ரீதியான உறவு தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், இந்தப் பகுதி மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
மன்னார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அபிவிருத்தி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, தூதரக அதிகாரிகள், ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

















