தாம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது ‘சங்காதிகரண’ (சங்க நீதிமன்றம்) சட்டமூலத்தைக் கொண்டு வந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
அச்சட்டம் காரணமாகவே இன்று விகாரைகளும் பௌத்த சின்னங்களும் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும்,
இல்லையெனில் அவை எப்போதோ விற்கப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாம் கொண்டு வந்த அந்தச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஏதேனும் தவறுகள் நடக்கும் பட்சத்தில், அந்தந்த நிகாயாக்களின் தலைமைகளுக்குச் சட்டப்படி உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் இன்றும் உள்ளது.
எனினும், அன்று இரண்டு மூன்று தேரர்களின் எதிர்ப்புக் காரணமாக இந்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனதால், இன்று அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம் இல்லாமல் போயுள்ளது குறித்துக் கவலை அடைகின்றேன்.
அரசாங்கத்தின் தற்போதைய வரைவிலக்கணத்தின்படி மதம் என்பது ஒரு பழங்குடித்தனமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
அவ்வாறான ஓர் அரசாங்கம் எவ்வாறு சங்காதிகரணத்தைக் கொண்டுவரும்?
தாம் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கொண்டு வந்த சட்டம் அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று பௌத்த சாசனத்தையோ அல்லது தேரர்களையோ எவரும் தூற்றவும், சாசனம் சீரழியவும் வாய்ப்பிருந்திருக்காது.
தற்போது நீதித்துறையில் நான்கு நீதிபதி பதவிகள் நீண்டகாலமாக வெற்றிடமாக உள்ளன.
சில நீதிபதிகள் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையிலேயே ஓய்வுபெற்றும் சென்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்?
நிர்வாகத்துறையும் அரசமைப்பும் நீதித்துறை வெற்றிடங்களை நிரப்பாதபோது, இவர்கள் எவ்வாறு சங்காதிகரணத்தை அமைப்பார்கள்?
நமது வாழ்நாளில் மிக மோசமான பொருளாதாரக் காலத்தை 2022 இல் எதிர்கொண்டோம்.
அன்று முழு அதிகாரத்துடன் இருந்த அரசாங்கம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாமல் வீட்டுக்குச் சென்ற பின்னர், நாடாளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தைக் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் எஞ்சியிருந்த சில உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தார்.
அன்று 6.4 பில்லியன் டொலராக இருந்த பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்பினோம்.
2028ஆம் ஆண்டளவில் கடனை மீளச் செலுத்த வேண்டுமாயின், அதனை 15 பில்லியன் டொலராக உயர்த்த வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது.
எனினும், தற்போது 500 மில்லியன் டொலர் எல்லைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நாட்டுக்கு அவசியமானவையா?
அவை அனைத்தும் தற்போது விற்பனை நிலையங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன.
சர்வதேச நாணய நிதியம் தங்கியிருக்கும் வீடுகளுக்கு வரி விதிக்குமாறு கோரிய போதிலும், மக்களுக்கு மேலும் சுமையளிக்கக் கூடாது என்பதால் நாம் அதனைச் செய்யவில்லை.
மத்திய வங்கி சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், முறையான முகாமைத்துவம் இல்லாததால் அது நம் நாட்டுக்குப் பொருத்தமற்றதாகிவிட்டது.
தற்போது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
வட்டி வீதக் கொள்கை 7.7 ஆக இருந்தபோது அதனை மேலும் உயர்த்தியதன் மூலம் இந்தத் தீர்வை எட்ட முடியுமா?
வட்டி வீதம் அதிகரிக்கும் போது கைத்தொழில்துறையினர் கடன் பெற மாட்டார்கள் என்பதால் பொருளாதாரம் முடங்கும்.
அரசு வங்கிகளின் இலாபம் 10 பில்லியனாகவும், தனியார் வங்கிகளின் இலாபம் 4 முதல் 5 பில்லியனாகவும் இருந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களில் இந்த வங்கிகளின் இலாபம் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போதுஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும், வங்கிகளிலும் பணம் குவிந்து கிடக்கிறதே தவிர முதலீடுகள் செய்யப்படுவதில்லை.
உலகின் எந்தவொரு நாடும் பொக்கிஷங்களில் பணத்தைப் பூட்டி வைப்பதில்லை.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமாயின் அந்தப் பணம் சந்தைக்கு வர வேண்டும்.
நமது நாடு வீழ்ச்சியடைவதையே வெளிநாடுகள் விரும்புகின்றன.










