காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேக சொகுசு ரயில் மோதியதில், இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம், சாலியபுரப் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை ஒன்றிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சாலியபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் சுயதொழில் மூலம் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தியவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று அவர், அனுராதபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குத் தான் தயாரித்த ‘ஐஸ் பக்கெட்டுகளை’ விற்பனை செய்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
அவர் சாலியபுர ரயில் கடவையைக் கடக்க முயன்ற போது, காங்கேசன்துறையிலிருந்து வந்த சொகுசு ரயில் மோட்டார் சைக்கிளுடன் அவரை மோதித் தள்ளியுள்ளது.
இவ் விபத்துத் தொடர்பில் அப்பகுதி மக்கள் ரயில்வே திணைக்களம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
விபத்து நடந்த குறித்த ரயில் கடவையில் எவ்விதப் பாதுகாப்புத் தடைகளும் நிறுவப்படவில்லை என்றும், அங்கு எச்சரிக்கை செய்வதற்குக் காவலர்கள் எவரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அந்தப் பகுதியில் ரயில் தண்டவாளம் இருபுறமும் வளைந்து நெளிந்து காணப்படுவதனால், தண்டவாளத்திற்கு மிக அருகில் செல்லும் வரை இருபுறமிருந்தும் வரும் ரயில்களையோ அல்லது சாலையையோ தெளிவாகப் பார்க்க முடியாத அபாபகரமான சூழல் நிலவுவதாகவும் கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ள அப்பகுதி மக்கள், இந்தத் தண்டவாளத்தில் மற்றொரு கொடிய விபத்து ஏற்பட்டு இன்னுமொரு உயிர் பறிபோவதற்கு முன்னர், உடனடியாக இப்பகுதிக்குத் தானியங்கிப் பாதுகாப்புத் தடைகளை நிறுவி, காவலர் ஒருவரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










