“இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு திறந்த, அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும்” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் நேற்று ஆரம்பமான “இலங்கை – ஜேர்மன் வர்த்தக மாநாடு 2026” (Sri Lanka – German Business Forum 2026) நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் ஜேர்மன் தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதி சபை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள ஜேர்மன் தூதரகத்தின் கூட்டு ஒத்துழைப்புடன் மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகின்றது. கடல்சார் மற்றும் வழங்கல் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சிகரமான இடமாக இலங்கையை சர்வதேச மட்டத்தில் ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
இம்மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளின் ஊடாக இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கூட்டாண்மை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக தொழிற்பயிற்சி, தொழிற்கல்வி, புத்தாக்க வலுசக்தி மற்றும் பொருளாதார பரிவர்த்தனை ஆகிய துறைகளில் ஜேர்மனி வழங்கி வரும் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
தற்போது இலங்கை, பேரினப் பொருளாதார நிலைத்தன்மையையும், கூடுதல் போட்டித்தன்மை மிக்க பொருளாதார மாதிரியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அரசு நிதி ஒருங்கிணைப்பு, கட்டமைப்பு சீரமைப்புகள் மற்றும் நல்லாட்சிசார் சீர்திருத்தங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்செயல்முறைகளின் போது பெண்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்கள் மீது ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் தொடர்பில் அரசு விசேட கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்ற மூலோபாய முக்கியத்துவமிக்க புவியியல் அமைவிடம், திறமையான தொழிலாளர் படை மற்றும் மேம்பட்டு வரும் முதலீட்டுச் சூழல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஜேர்மன் வணிக சமூகத்தினர் இலங்கையுடன் புதிய வர்த்தகக் கூட்டாண்மைகளை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது பகிரங்க அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி ஃபெலிக்ஸ் நியூமன், இலங்கையின் ஜேர்மன் தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதி சபையின் பிரதான பிரதிநிதி மார்ட்டின் க்ளோஸே ஆகியோருடன் இரு நாடுகளினதும் உயர் அரச உத்தியோகத்தர்களும், முன்னணி வர்த்தக சமூகப் பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















