அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துமாரு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துக்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபா அரச நிதியைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தினர் என்று இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தப் பாரிய நிதி முறைகேட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் நேரடி ஆலோசனையின் பேரில், பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் இந்நபர்கள் அனைவரும் இந்த வழக்கில் பிரதான சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று விசேட மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வழக்கை விரிவாக ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்களைக் தாமதமின்றி கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தார்.










