பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்
பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதில் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் ரஃபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்திடம் இருந்து 36 விமானங்களை இந்தியா ஏற்கனவே கொள்வனவு செய்துள்ளது.
இந்நிலையில், தற்போது பிரான்சிடமிருந்து மேலும் 114 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான கோரிக்கை கடிதத்தை இந்தியா இறுதி செய்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்த கடிதத்தை பிரான்சுக்கு இந்தியா அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளதால், இந்திய விமானப்படையின் பலமும் உள்நாட்டு ஒருங்கிணைப்பும் அதிகரிக்கும்.
கிட்டத்தட்ட 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீதமுள்ள விமானங்கள் பறக்கும் நிலையில் வந்து சேரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் அடுத்த மாத தொடக்கத்தில் பிரான்ஸ் செல்லவிருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும் ஜூன் மாத இறுதியில் பிரான்ஸ் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை இயக்கி வருகிறது.
இந்திய கடற்படை, அடுத்த சில ஆண்டுகளில் விமானம் தாங்கி கப்பல் நடவடிக்கைகளுக்காக 26 ரபேல் விமானங்களை இணைத்துக்கொள்ளவும் தயாராகி வருகிறது.
விமானப்படையை வலுப்படுத்தவும், போர் விமானப் படைப்பிரிவுகளில் உள்ள பற்றாக்குறையைச் சரிசெய்யவும் இந்தியா நீண்ட காலமாக வகுத்துவரும் திட்டத்தில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமாக பார்க்கப்படுகிறது