இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 91 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்.!
புதுமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.91 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சிகரெட்டை கடத்தி வர பயன்படுத்திய வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த மெரைன் பொலிஸார் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த புதுமடம் கடற்கரையில் இன்று (18) அதிகாலை சுமார் ஒரு மணியளவில் புதுமடம் மெரைன் பொலிஸார் மற்றும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு படகு மூலம் கடல் வழியாக கடத்தல் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வாகனம் ஒன்றில் இருந்து மூட்டைகளை இறக்கி கடற்கரையில் பதுக்கி வைத்துக் கொண்டிருப்பதை கண்ட மெரைன் பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற போது அங்கு இருந்தவர்களில் சிலர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை மட்டும் பிடித்து அங்கிருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தபோது 35 மூட்டையில் 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இந்த வெளிநாட்டு சிகரெட்கள் இன்று அதிகாலை படகில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து புதுமடம் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் (38) என்பவரை கைது செய்த மெரைன் பொலிஸார் வெளிநாட்டு சிகரெட் மற்றும் சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சுங்கத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் மதிப்பு ரூ. 91 இலட்சம் எனவும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
