உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மணல் விநியோகம் குறித்து கிளிநொச்சி மாவட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
67 பார்வைகள்

கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகத்தை ஆரம்பித்தல் மற்றும் மணலின் விலையை அரைவாசியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கிளிநொச்சி மாவட்ட மணல் மற்றும் கிரவல் விநியோகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தலைமையில் இக்கூட்டம் இன்று (10.04.2026) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் அவர்கள், சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ள அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் மணலின் விலையும் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. எனவே, மணல் விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தமைக்கான பிரதான காரணம் ஊழல் ஒழிப்பாகும். இந்த அரசாங்கத்தின் காலத்தில் மணல் விநியோகப் பிரச்சினைக்கு நாம் தீர்வு காண முடியாவிட்டால், வேறெந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதற்குத் தீர்வு காண முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க கடந்த மார்ச் 10ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்துக்கு வருகை தந்திருந்தபோது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே, மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்த மாவட்ட மட்டக் கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டக் குழுவின் அனுமதியின்றியும், குழுவுக்குத் தெரியாமலும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படக் கூடாது. மணல் பெறக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தல், அவற்றைச் சேகரித்தல் மற்றும் மக்களுக்கு விநியோகித்தல் ஆகிய பொறிமுறைகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கே மாகாண மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து இதுவரையான காலப்பகுதியில் மணல் விநியோகத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்டச் செயலாளரால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

கல்மடுக்குளப் புனரமைப்பின் ஊடாகப் பெறப்பட்டு கரைச்சிப் பிரதேச சபையினூடாக விநியோகிக்கப்பட்டது போக, எஞ்சியுள்ள மணலைத் துரிதமாக விநியோகித்து முடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாக ஆற்றுப்பகுதிகளில் படிந்துள்ள மணல் திட்டுக்களை அகழ்ந்து பொருத்தமான இடங்களில் களஞ்சியப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. பகல் வேளைகளில் பிரதேச சபையின் ஒப்பந்ததாரர்களால் மணல் அகழப்படும் அதே இடங்களில், இரவு நேரங்களில் சட்டவிரோத அகழ்வுகள் இடம்பெறுவதைக் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து அப்பகுதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்தனர்.

பிரதேச சபைகளினூடாக அகழ்வுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றவர்கள் அதனை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், உரிய திணைக்களங்கள் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு, மணலின் அளவைக் கணக்கிட்டு அவற்றை அகழ்வதற்கான காலவரையறையை நிர்ணயிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக இரணைமடு மேலதிக நீர் வெளியேறும் ஆற்றுப்பகுதி, அக்கராயன் ஆறு மற்றும் கல்லாறு பகுதிகளில் கள ஆய்வுகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

அக்கராயன் ஆற்றுப் பகுதியிலுள்ள மணல் திட்டுக்களிலிருந்து மணல் எடுக்கும் செயற்பாட்டைத் தம்மால் முன்னெடுக்க முடியாது என உள்ளூராட்சி மன்றம் தெரிவித்ததையடுத்து, பொருத்தமான பொது அமைப்பொன்றின் ஊடாக அதனை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது.

பளை (பச்சிலைப்பள்ளி) பிரதேச செயலாளர் பிரிவின் புதுக்காடு பகுதியில் உள்ள மணலை உடனடியாக விநியோகிப்பதற்கான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், கரியாலை நாகபடுவான் குளம், பண்டிவெட்டிக்குளம், குடமுறுட்டி குளம், இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக்குளம் ஆகியவற்றிலிருந்து இயந்திரங்கள் மூலம் மணலைக் கழுவி எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய ஏனைய அனுமதிகளுக்கான கள ஆய்வுகளைத் துரிதப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

மணல் திட்டுக்களிலிருந்து எடுக்கப்படும் மணல் மற்றும் கழுவி எடுக்கப்படும் மணல் ஆகியவற்றுக்கான இறுதி விலையை, அகழ்வு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட சகல செலவுகளையும் உள்ளடக்கி மாவட்டக் குழுவே தீர்மானிக்கும். ஆரம்ப கட்டமாக உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து பாரவூர்தி உரிமையாளர் சங்கங்கள் ஊடாக மணலை விநியோகிக்கவும், பரீட்சார்த்தமாக உள்ளூராட்சி மன்றங்களின் வளாகங்களிலிருந்தே சிறிய பொதிகளில் மணலை விற்பனை செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து குறைந்தது 20,000 கியூப் மணலைப் பெற்றுக்கொள்ள முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை உரிய பொறிமுறையூடாகத் தொடர்ச்சியாக விநியோகிப்பதன் ஊடாக மணல் விலையைக் கணிசமாகக் குறைக்கவும் சட்டவிரோத அகழ்வுகளைக் கட்டுப்படுத்தவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளர் சு.கபிலன்,
சட்டவிரோத மணல் விநியோக நடவடிக்கைகளை அரசாங்கம் மிக இறுக்கமாகக் கட்டுப்படுத்தும். எதிர்காலத்தில் மணல் அனுமதி மற்றும் விநியோகத்தை இலத்திரனியல் மயப்படுத்தி QR குறியீடு ஊடாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த காலங்களில் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளைத் தொடர்ந்து நீடிக்க வேண்டிய தேவை தற்போது இல்லை. உள்ளூராட்சி மன்றங்களுக்கே இதில் முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் அதனைச் செய்யத் தவறினாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ மாத்திரமே, எதிர்காலத்தில் தனிநபர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் மாவட்டக் குழு ஆராயும் எனக் குறிப்பிட்டார்.

உருவாக்கப்படும் இப்புதிய பொறிமுறைக்கு முழுமையான பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகக் கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதன்போது உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் கௌரவ ஆளுநர், மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபைகளின் தவிசாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர், வனவளத் திணைக்களப் பிரதிநிதி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0