இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கடற்றொழில் பிரதிஅமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படைக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் விசாரணை நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அதில் இந்திய கடற்படையோ இந்திய கடலோர காவல்படையோ இச்சம்பவத்தில் தொடர்புபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதிஅமைச்சர் ரத்ன கமகே,
“கடந்த நாட்களில் எமது இரண்டு மீனவப் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்டை நாடான இந்தியாவின் கடலோர காவல்படையினர் இதனை மேற்கொண்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இது தொடர்பில் உண்மைகளை கண்டறிய அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.எமது நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானது. தாக்குதல் வெளிநாட்டு குழுவினராலா, உள்நாட்டு நபர்களாலா அல்லது வேறு அமைப்பினராலா மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து தெளிவான அறிக்கை பெறப்படும் வரை விசாரணைகள் தொடரும்” என தெரிவித்தார்.










