மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்து முற்றிலும் முறையற்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தலை நடத்துவதாகக் கூறிவிட்டு, தற்போது காலவரையறையின்றி பிற்போடுவது அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறும் செயல் என்றும் அவர் சாடினார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாகத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றி வருகின்றது.
2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகக் குறிப்பிட்டே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
பின்னர் 2025 இல் முடியாது, 2026ஆம் ஆண்டில்தான் தேர்தல் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், ஜே.வி.பி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வடக்கு மாகாணத்துக்குச் சென்று, இந்த ஆண்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ரில்வின் சில்வாவின் இந்த அறிவிப்பின்படி பார்த்தால், மாகாண சபைத் தேர்தல் கடந்த ஆண்டும் இல்லை, இந்த ஆண்டும் இல்லை என்ற சூழலே உருவாகியுள்ளது. இதன் மூலம், ஒரு வருட காலத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக மக்களுக்கு வழங்கிய உத்தியோகபூர்வ வாக்குறுதியை இந்த அரசு அப்பட்டமாக மீறியுள்ளது.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் பின்னணியில், நாடாளுமன்றச் செயற்பாடுகளும் ஏமாற்றமளிக்கின்றன.
மாகாண சபைத் தேர்தல் நடாத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த விசேட குழுவில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நானும் அங்கம் வகிக்கின்றேன். ஆனால், அங்கு நடக்கும் விவாதங்களையோ அல்லது செயற்பாடுகளையோ பார்க்கும்போது, தேர்தலை நடத்துவதற்கான எவ்விதமான நேர்மறையான அறிகுறியும் அங்கு தென்படவில்லை.
எனவே, அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளாமல், மாகாண சபை முறையைத் தக்கவைக்க உடனடியாகத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.” – என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் வலியுறுத்தினார்.










