மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று மாலை செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் ஏறாவூர்ப்பற்று மற்றும் ஏறாவூர் நகர சபைகளின் தவிசாளர்கள், திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சிலர் பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பிரதேச செயலக கூட்ட மண்டபத்திற்குள் நுழைந்து பதாதைகளை கையில் ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுத்தனர்.
இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் உள்ளிட்டோரிடம் கையளித்தனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்திகளை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளை தடுப்பதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் விசேட பொலிஸ் குழுக்களை ஏற்படுத்தி நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் இது தொடர்பில் செயற்படும் பொதுமக்களுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதை தொடர்ந்து பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக சட்டவிரோத மதுபான உற்பத்தி, விவசாய பிரச்சினை, காட்டு யானைப் பிரச்சினை, குப்பை மேட்டுப் பிரச்சினை குடிநீர்த் பிரச்சினை, வீதிப் பிரச்சினை, வாள்வெட்டு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
அத்துடன் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

















