அனுராதபுரம், மதவாச்சிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை காட்டு யானை ஒன்று திடீரெனத் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். நேற்று திங்கட்கிழமை மாலை தனது பணி முழுவதையும் முடித்துக்கொண்டு, வழமை போல பேருந்து மூலம் மதவாச்சிக்கு வந்து இறங்கியுள்ளார். பேருந்து நிறுத்தத்திலிருந்து தனது வீட்டுக்குச் செல்வதற்காக, அங்கிருந்த வயல் வெளிப் பாதையூடாக அவர் நடந்து சென்றுள்ளார்.
இதன்போது, அந்த வயல் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று, திடீரென அந்த நபரை நோக்கி ஓடிவந்து மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.
காட்டு யானையின் இந்தத் திடீர் தாக்குதலுக்கு இலக்காகி, பலத்த காயமடைந்த நிலையில் அந்தப் பகுதியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதுடன், குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த இவரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொலிஸாரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதவாச்சி கிராம மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.










