கரைச்சி பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் சபை தவிசாளர் கெளரவ அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று பதவியேற்றுக் கொண்டது.
கிளிநொச்சி நகர சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மதவழிபாடுகளைத் தொடர்ந்து, சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் திரு.தங்கபாண்டி ஞானராஜ் தலைமையில் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகள் இன்று காலை சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றன.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கெளரவ சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பரமானந்தம் சத்தியராகவன், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, வடக்கு மாகாண சபையின் மேனாள் உறுப்பினர் பசுபதி அரியரத்தினம், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியதுடன் சபையின் தவிசாளராக இன்று பதவியேற்றுக்கொண்ட கெளரவ அருணாசலம் வேழமாலிகிதன் அவர்கள் முதன்மை உரையாற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் புதிய உபதவிசாளர் கெளரவ புஸ்பநாதன் சிவகுமார், தெரிவுசெய்யப்பட்ட கெளரவ உறுப்பினர்கள், மேனாள் உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சபையின் பணிக்குழாமினர், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


