2025/2026 சிவனடிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது.
தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம்பெற்று வந்த நிலையில் வரும் வைகாசி விசாக பௌர்ணமி நாளில் முடிவு பெற உள்ளது.
எதிர்வரும் வைகாசி விசாக பௌர்ணமி நாளில் சிவனடிபாத மலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் ஆபரணங்கள் பூஜை பொருட்கள் என்பன இரத்தினபுரி பலாபத்பல வழியாகவும், நல்லதண்ணி நோட்டன் வழியாகவும், நல்லதண்ணி பொகவந்தலாவ பலங்கொட வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் வைகாசி விசாக பௌர்ணமி நாளான 30 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிகளில் இவ் வருட பருவ கால நிறைவுக்கான விஷேட பிரித் வைபவம் இடம்பெற்ற பின்னர் 2025/2026 க்கான சிவனடிபாத மலை பருவ காலம் நிறைவு பெற உள்ளது.
அன்றைய தினம் சுவாமிகள் நல்லதண்ணி நகருக்கு லக்சபான இராணுவ முகாம் வீரர்களால் பல்லக்கில் வைத்து எடுத்து வரப்பட்டு நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மத்திய நிலையத்தில் வைத்து நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் வணங்கிய பிறகு சிவனடிபாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் அவர்களின் வழிகாட்டலில் சுவாமிகள் பூஜை பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் மூன்று வழிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்லப்பட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என சிவனடிபாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் தெரிவித்தார்.










