பெண்களை அரசியல் நீதியில் பலப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் காட்டார் தொண்டு நிறுவனத்தின் இலங்கைக்கான உதவி பணிப்பாளர் ஷாய்ரா தெரிவித்தார்.
நேற்றையதினம் சனிக்கிழமை மகளிர் தினத்தை முன்னிட்டு கபே அமைப்பு ஏற்பாடு செய்த அரசியலில் உள்ள பெண்களை வலுப்படுத்துதல் மற்றும் இணையதளப் பாவனை தொடர்பான மூன்று நாள் பயிற்சி பட்டறை நிகழ்வை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியே ஜிம்மி காட்டார் மற்றும் அவரது மனைவியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட “காட்டார்” நிறுவனம் இலங்கையில் முதற்தடவையாக “கபே” அமைப்புடன் இணைந்து பெண்களுக்கான பயிற்சி பட்டறையை நடாத்துகிறது.
எமது அமைப்பு பெண்கள் உரிமை உலக சமாதானம் மற்றும் சுகாதார துறை சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துகின்ற அமைப்பாக விளங்கி வரும் நிலையில் எமது செயற்பாடுகளை இலங்கையிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
பெண்களின் இணையதளப் பாவனை சமூக ஊடகங்களை கையாளுதல் மற்றும் ஊடக வகிபாகம் தொடர்பில் பயிற்சி பட்டறையின் போது பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் தேர்தல் காலங்களில் செலவு செய்யப்படும் நிதி தொடர்பான வெளிப்படத் தன்மை தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
ஆகவே இலங்கையில் முதல் தடவையாக காபே அமைப்புடன் சேர்ந்து பெண்கள் வலுவூட்டல் செயல்பாடுகளில் பங்கு எடுத்தமை எமக்கு மகிழ்ச்சியை தருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மானஸ் மகீன் யாழ் மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

