காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ளனர். எனவே எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்கவேண்டும் என்று வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “எமக்கான நீதிகோரி நாங்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் 300 இற்கும் மேற்ப்பட்ட உறவுகளை இழந்துள்ளோம். தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே அவர்கள் இறந்துள்ளனர்.
எனவே மீதமுள்ள சாட்சிகளாக உள்ள நாங்களும் இறக்க முன்பாக எமக்கான நீதியை சர்வதேசம் வழங்கவேண்டும். கொலைக் குற்றங்களை செய்த அரச படைகளை விசாரிக்க இயலாத அரசாங்கம் தமிழ் இனத்தை ஏமாற்றி வருகின்றது.
எனவே எதிர்வரும் ஐ.நா கூட்டத்தொடரிலாவது எமக்கான சர்வதேச நீதிப்பொறிமுறையூடான நீதி ஒன்றை வழங்கவேண்டும் என்று கேட்டு நிற்கின்றோம்” எனத் தெரிவித்தனர்.



