மட்டக்களப்பில் வீட்டுவேலைத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000 ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளப் பட்டியல் ஒன்றை வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (31) வெளியிட்டு வைத்தது.
மட்டக்களப்பு டயஸ் லேனிலுள்ள வீட்டுவேலை தொழிலாளர் சங்க காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாள் மாநாட்டில் சம்பளப் பட்டியலை சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வெளியிட்டு வைத்து இவ்வாறு தெரிவித்தனர்.
மாவட்டத்தில் 450 மேற்பட்ட வீட்வேலைத் தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு தொழில் வழங்குபவர்கள் ஒரு வேலைக்கு அழைத்து ஏனைய வேலைகளை வாங்கி கொண்டு அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற சம்பளங்களை வழங்காது சாப்பாட்டுப் பொதியை வழங்கி அத்துடன் குறைந்த ஊதியத்தை வழங்கி அவர்களை அவமதித்து நடாத்தி வருகின்றனர்.
இவ்வாறு வீட்டு வேலைத் தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக சம்பளப் பட்டியல் ஒன்றை நிர்ணயித்துள்ளோம். அதற்கமைய 8 மாணிநேர வேலைக்கு 2000 ரூபாவும், 4 மணித்தியால வேலைக்கு 1500 ரூபாவும், ஒருமணிநேர வேலைக்கு 500ரூபாவும், 8 மணித்தியாலயத்திற்கு மேல் வேலை செய்தால் ஒரு மணித்தியாலயத்திற்கு 250 ரூபாவும், தங்கி வேலை செய்வோருக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவும் தொழில் வழங்குபவர்களால் வழங்கப்பட வேண்டும் என சம்பள பட்டியல் ஒன்றை நிர்ணயித்து அதனை இன்று துண்டுபிரசுரம் மூலமாக பொது இடங்களில் விநியோகிக்க உள்ளோம்.
எனவே எமது சங்கம் கண்டியை தலைமையகமாகக் கொண்டு பல மாவட்டங்களில் இயங்கி வருகின்றது. இந்த சங்கத்திலுள்ள வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்த சங்கத்தில் இணையாத வீட்டுவேலை தொழிலாளர்கள் இணைந்து கொள்ளமுடியும் என்றனர்.
இதனையடுத்து சம்பளப் பட்டியல் துண்டுப் பிரசுரத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளித்து வெளிட்டு வைத்த பின்னர் துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.