சக மாணவர்கள் மீது தாக்குதல்; யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் ஐவர் மீது நேற்றுமுன்தினம் இரவு பல மாணவர்கள் இணைந்து மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தியதுடன், பிளேட்டால் வெட்டுக் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்களும் யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட அவர்கள், தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரையும் பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 20 பேர் உட்பட 21 மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினார்கள்.
வழக்கை ஆராய்ந்த நீதிபதி என்.ஹூசைன் சந்தேகநபர்களான மாணவர்கள் 21 பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


