வல்வெட்டித்துறை சபையில் சிவாஜிலிங்கத்துக்கு அஞ்சலி.!
“வட்டுக்கோட்டை முதல் வல்வெட்டித்துறை வரையான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தமிழ் மக்களின் விடுதலைக்கான 50 ஆண்டுகாலப் போராட்டம் ஓய்ந்தது. அவரது உடல் பிரிந்தாலும் ஆன்மா எங்களை என்றென்றும் வழிநடத்தும்” என்று வல்வெட்டித்துறை நகர சபையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் புகழாரம் சூட்டப்பட்டது.
வல்வெட்டித்துறை நகர சபையின் 17ஆவது சபை அமர்வு பதில் நகரபிதா நாகதம்பி பத்மநாதன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அமர்வில், நகர சபைச் செயலாளர் குணபாலசிங்கம் ராஜ்குமார் உள்ளிட்ட சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து, அண்மையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, சிவாஜிலிங்கத்தின் உருவப் படத்துக்கு முன்னாள் நகரபிதாவும் உறுப்பினருமான திருமதி தவமலர் சுரேந்திரநாதன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பதில் நகரபிதா நா. பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் செயலாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இடம்பெற்ற அஞ்சலி உரையின்போது, மறைந்த நகரபிதா எம்.கே. சிவாஜிலிங்கம் முன்னெடுத்த மக்கள் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் என்று பதில் நகரபிதா தெரிவித்தார்.
இதன்போது நகர சபை உறுப்பினர் ஆறுமுகம் ஞானேஸ்வரன் அஞ்சலி உரையாற்றுகையில்,
“1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பேராளர் மாநாட்டில் தொடங்கிய எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பயணம், 2026ஆம் ஆண்டு வரை வல்வெட்டித்துறை நகர சபையில் தொடர்ந்தது. தமிழ் மக்களின் விடுதலைக்கான அவரது 50 ஆண்டுகாலப் போராட்டம் ஓய்ந்தது. அவரது உடல் எம்மை விட்டுப் பிரிந்தாலும் ஆன்மா எங்களை என்றென்றும் வழிநடத்தும்.
சிவாஜிலிங்கத்தின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கும்போதும் மலர் தூவி அஞ்சலிக்கும்போதும் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய மணி ஒலித்தது. முத்துமாரி அம்மன் பாதார கமலத்தில் அவரது ஆன்மா இளைப்பாறும். அவரது இழப்பு வல்வெட்டித்துறை மண்ணுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் விட்டுச்சென்ற மக்கள் பணியைக் குந்தகம் விளைவிக்காது தொடர்வதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.” – என்றார்.













