கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு; ஜானகிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
கிரிஷ் நிறுவனத்துடனான இலஞ்சக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அன்றைய தினம் விளக்கமறியலில் இருப்பின், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் வழக்கு விசாரணைக்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கு அழைக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் முன்னிலையான இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விடயங்களை முன்வைக்கையில், இந்த வழக்கின் 1, 2 மற்றும் 6ஆவது சந்தேகநபர்களான கிரிஷ் டிரான்ஸ்வர்க்ஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்களான இந்தியப் பிரஜைகள் அமித் கட்டியார், ராஜேந்திர பிரசாத் குப்தா மற்றும் ஆஸ்சர்யா சோனி ஆகியோருக்குப் பிடியாணை பிறப்பிப்பதற்காக நீதிமன்றத்தில் சாட்சியங்களை நெறிப்படுத்தவுள்ளதாக அறிவித்தது.
மேலும், இக்கட்டட நிர்மாணப் பணிகளுக்கான அளவீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அளவைத் திணைக்களத்திடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனாதிபதியின் மானியம் வழங்கும் பத்திரமொன்றின் கீழ் இக்காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கியமை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய, அப்போதைய ஜனாதிபதியின் மானியம் வழங்கல் பத்திரத்தின் கீழ் இது வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த வழக்கின் நான்காவது சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவின் கையெழுத்துப் பரிசோதனைக்குத் தேவையான ஆவணத்தைக் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிவிக்கும் தினத்தில் அந்த ஆவணம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
அத்துடன், மூன்றாவது சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களும் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கமைய மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிவான், மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகப் பிடியாணை கோருவதற்கான சாட்சி விசாரணையை எதிர்வரும் தினத்தில் முன்னெடுக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரை மூன்றாவது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். மேற்படி சந்தேகநபரின் பிணை உத்தரவு எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என்று நீதிவான் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடந்த வழக்கு விசாரணையின்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த 18ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் அந்தப் பிணை உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த இடைக்காலத் தடையுத்தரவு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் இருப்பின், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


