உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வைத்தியசாலைகளை மத்திய அரசு அபகரிப்பது ஒற்றையாட்சி முறைமையின் கோரமுகத்தை வெளிப்படுத்துகிறது.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
124 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையில் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டப் பொது வைத்தியசாலைகளையும், மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் அவிசாவளை மாவட்டப் பொது மருத்துவமனைகளையும் அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்வாங்குவதாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையை நிர்வாக ரீதியாக நிர்க்கதியாக்கும் அரசாங்கத்தின் இந்த எதேச்சதிகாரம் இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கோர முகத்தை வெளிப்படுத்தி நிற்கிறது என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பொது மருத்துவமனைகளை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது பற்றிய ஜனாதிபதியின் பாதீட்டு உரை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஏற்கனவே மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற நிலையில், வடக்கின் எஞ்சிய நான்கு மாவட்டங்களின் வைத்தியசாலைகளையும் ஒரேடியாகக் கொழும்பு கபளீகரம் செய்கின்றது. இதன் மூலம், வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் ஒரு மாவட்ட வைத்தியசாலைகூட இல்லாத அவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியின் கீழ் அமைச்சரவைத் தீர்மானமொன்றின் மூலம் கொண்டுவரப்பட்ட அதே அதிகார அபகரிப்புத் திட்டத்தை தற்போதைய அரசாங்கமும் கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.

மாற்றம் குறித்தும், அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் பேசி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசுகளைவிடவும் வேகமாக அதிகாரங்களைக் குவிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. வைத்தியசாலைகளை உயர்த்துவதாகவும், மேம்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்காத சூழ்நிலையில் நிறுவனங்களைப் பறித்தெடுப்பது ஜனநாயக விரோதமாகும். வடக்கின் வைத்தியசாலைகள் தரம் தாழ்ந்து காணப்படுவதற்கு, மத்திய அரசு மாகாண சபைக்குரிய நிதி ஒதுக்கீடுகளையும், ஆளணி மற்றும் வளங்களையும் திட்டமிட்டு மறுத்தமையே காரணமாகும்.

இலங்கை அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையின் பிரகாரம் மாவட்ட பொது வைத்தியசாலைகள் மாகாண சபைகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை. இருந்தும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முடியாத இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையும், கொழும்பில் அதிகாரங்களைக் குவிக்கும் பேரினவாத ஏகாதிபத்தியப் போக்குமே அடிப்படைக் காரணங்கள் ஆகும்.

ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் வழங்கப்படும் எந்தவொரு அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் விருப்புக்கு ஏற்ப எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்பதை இந்த அபகரிப்பு மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

133 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0