தமிழ்க் கிராமங்களை சிங்கள குடியேற்றங்களாக மாற்றி இனவாதம் வளர்ப்பு.!
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ்க் கிராமங்கள் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு, அவை இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
மஹிந்த, ரணில் ஆட்சிக் காலத்தின் இனவாதப் போக்கினையே தற்போதைய அரசும் கடைப்பிடிக்கின்றது என்றும், தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக இன்று தெற்கில் சிங்கள மக்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்திலிருந்து மொரவெவ பகுதிக்கு, அரச நிறுவனத்தின் அனுமதியுடன் கொண்டுசெல்லப்பட்ட 1200 கால்நடைகள் அந்தப் பகுதியிலுள்ள குடியேற்றவாசிகளால் தாக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் 14 கிலோமீற்றர் தூரம் வரை துரத்தியடிக்கப்பட்டுள்ளன.
முன்னர் தமிழர் கிராமமாக இருந்து சிங்களக் குடியேற்றமாக மாறிய மொரவெவ பகுதியில், சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட கால்நடைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது முற்றுமுழுதாக ஒரு இனவாதச் செயற்பாடாகும். இதற்கு அரசு என்ன தீர்வை வழங்கப்போகின்றது?
மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பிரச்சினைக்கு இதுவரை எந்த அரசும் தீர்வு வழங்காத நிலையில், அந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக இனவாதமாக மாற்றப்பட்டு வருகின்றது. முந்தைய அரசின் இனவாதிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ, பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கோ தற்போதைய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் மற்றும் அவரது குடும்பத்தினரை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளமையுடன், 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனக் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அதேபோல், சமூக வலைத்தளப் பதிவொன்றை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். மஹிந்த மற்றும் ரணில் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஜனநாயகத்துக்கு எதிரான அடக்குமுறைகளே தற்போதும் தொடர்கின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது அதைவிடவும் பாரதூரமான சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிராகத் தெற்கில் சிங்கள மக்களே வீதியில் இறங்கிப் போராடும் சூழல் உருவாகியுள்ளது.
அரசு ஜனநாயகத்துக்கும் மனித உரிமைக்கும் எதிராகத் தொடர்ந்து செயற்பட்டால், கடந்த அரசுகளுக்கு ஏற்பட்ட அதே கதியே இதற்கும் ஏற்படும்.” – என்று எச்சரித்தார்.


