உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆபத்தான நிலையில் புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம் – உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
94 பார்வைகள்

யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவகப் பகுதிகளையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து மார்க்கமான புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம், நிரந்தர புனரமைப்பின்றி இருப்பதுடன், அதன் இரு கரைகளும் பாதுகாப்பு கற்களோ அன்றி இரும்பு சட்ட அணைகளோ இன்றி இருப்பதுடன் அதன் இரு கரையோரங்களும் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதால், மழை காலமாகிய இக்காலப்பகுதியில் பாரிய விபத்துகள் ஏற்படும் ஆபத்து வலுப்பெற்றுள்ளதாக மக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆழுகையில் இருக்கும், இலங்கையின் நீளமான கடற்பாலங்களில் ஒன்றான சுமார் 5 கிலோமீற்றர் நீளமுடைய இப்பாலத்தைப் பாதுகாப்பான முறையில் புனரமைத்து, மக்களின் அச்சமற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையும், இன்றைய அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம் புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு உள்ளிட்ட தீவகப் பகுதிகளின் போக்குவரத்தில் இப்பாலம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

குறிப்பாக, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், நாக விகாரை மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் பயணிக்க இந்த ஒரு வீதியே போக்குவரத்து மார்க்கமாக இருக்கின்றது.

அத்துடன், கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் நாளாந்தம் இப்பாலத்தின் ஊடாகப் பயணிக்கின்றனர்.

இதனால், தீவகத்தின் பொருளாதார மற்றும் மக்கள் சார் நடவடிக்கைகளுக்கும் இப்பாலம் இன்றியமையாததாக விளங்குகின்றது.

இதேநேரம், யுத்த காலத்திலும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தீவகத்தின் பிரதான வீதிகளைப் புனரமைப்பதற்கான பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுகளின் அடிப்படையில் தீவகத்தின் பிரதான வீதிகளைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில், குறிகாட்டுவான் – வழுக்கையாறு வீதியையும் மீளமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது.

சுமார் 27.5 கிலோமீற்றர் நீளமுடைய இவ்வீதியில் 5 கிலோ மீற்றர் மற்றும் 2 கிலோ மிற்றர் கொண்ட இரண்டு பெரும் பாலங்கள் அமைந்துள்ளதுடன், வீதியின் நீளம் மற்றும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு நிதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அபிவிருத்திப் பணிகள் தாமதமடைந்திருந்தது.

இந்நிலையில், நீண்ட காலம் சிறு சிறு புனரமைப்புடன் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட குறித்த வீதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், நயினாதீவு விகாராதிபதியின் வலுவான கோரிக்கையால் வேலணை அராலிச் சந்தியிலிருந்து குறிகாட்டுவான் வரையான பகுதி அகலிக்கப்படாது, தற்காலிகமாக காப்பெற் இடப்பட்டு செப்பனிடப்பட்டது.

எனினும், புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலத்தின் கட்டமைப்பில், நிரந்தர புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படாத நிலையில், பாலத்தின் இரு கரையோரப் பகுதிகளும் தற்போது பெரும் சேதமடைந்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மறுபுறம், குறித்த வீதி ஒடுங்கிய நிலையில் காணப்படுவதால், வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்வதும், எதிரெதிரே வரும் வாகனங்கள் பாதுகாப்பாக விலகிச் செல்வதும் பெரும் சவாலாக இருக்கின்றது.

மேலும், பாலத்தின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதிருப்பதுடன், வீதியும் ஆங்காங்கே சிதைவடைந்தும் காணப்படுகின்றன.

இதனால் வாகனங்கள் வீதியை விட்டு விலகிக் கடலுக்குள் சென்ற சம்பவங்களும், விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்ற என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், இப்பாலத்தின் ஊடாகப் பயணிக்கும் சாரதிகளும் பயணிகளும் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் தற்போது பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், பாலத்தின் சேதமடைந்த பகுதிகள் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, பாலத்தின் இரு கரையோரங்களையும் சீரமைப்பதுடன், பாதுகாப்புத் தடுப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

அத்துடன் குறிகாட்டுவான் இறங்குதுறையை சீர்ப்படுத்தும் இன்றைய அரசு, தற்காலிகத் திருத்தங்களுடன் காலத்தைக் கடத்தாமல், தீவக மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் தேவையைக் கருத்திற்கொண்டு, குறிகாட்டுவான் – வழுக்கையாறு வீதி மற்றும் புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலத்தை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மக்களின் வலியுறுத்துகின்றனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என,  முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்குச்சென்று காணாமல்போன…

65 0 0
இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த…

66 0 0
இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

82 0 0
இலங்கை செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் நாளை (29) முதல் இணையம் ஊடாக திகதியையும் நேரத்தையும்…

83 0 0