அடுத்த ஆட்சி அதிகாரத்தை நாங்களே கைப்பற்றுவோம்.!
தற்போதைய இடதுசாரி கொள்கையுடைய அரசுக்கு மாற்றாக, சர்வதேச அங்கீகாரமும் அனுபவமும் கொண்ட வலதுசாரி அரசொன்றை அமைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
“எங்களை விடவும் சிறந்த ஒரு குழுவே அடுத்ததாக ஆட்சியைக் கைப்பற்றும்” என ஜனாதிபதி அடிக்கடி குறிப்பிடுவது, மறைமுகமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் குழுவையே குறிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“எதிர்வரும் காலங்களில் மாகாண சபை அல்லது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் நிச்சயமாக ஒரே சின்னத்தின் கீழ் இணைந்து போட்டியிடவுள்ளன. தற்போதைய இடதுசாரி அரசை வீழ்த்துவதையும், நாட்டின் எதிர்காலத்தை மாற்றி அமைப்பதையும் இந்தக் கூட்டணி முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் 1.23 மில்லியன் புதிய வாக்காளர்களாக உருவெடுக்கும் ‘ஜென்-ஸீ’ தலைமுறையினரும், முன்னர் இவ்விரு கட்சிகளும் தனித்துச் செயற்பட்டதால் வாக்களிக்காதிருந்த சுமார் 1.5 மில்லியன் வாக்காளர்களும் இந்தக் கூட்டணியின் பக்கம் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் முதன்மை மூலக்காரணம் டொலர் பற்றாக்குறையே ஆகும்.
வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ளமை மற்றும் ஏற்றுமதி வருமான வீழ்ச்சிக்குத் தீர்வாகக் கூட்டணி அரசு அமைக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 10 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டொலர் கையிருப்பு வலுப்படுத்தப்படும். உழைக்கும் போது செலுத்தும் வரி 11% முதல் 15% வரை குறைக்கப்படும். எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்படும்.
தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்திலும் பெருமளவிலான இரகசிய அரசியல் ஒப்பந்தங்கள் இடம்பெற்று வருகின்றன. ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியல் அடக்குமுறைகளையும் பழிவாங்கல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.


