பழைய அரசியல் கலாசாரத்துக்கு எதிராக கொழும்பில் இளைஞர்கள் போராட்டம்!
நாட்டின் பழைய அரசியல் கலாசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘நியூ விங்ஸ்’ அமைப்பு மற்றும் பல்வேறு இளைஞர் அமைப்புகள் இணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தன.
“வெள்ளையில் உடை அணிந்து, கறுப்பில் வருகை தருதல்” எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
மக்களின் பிரச்சினைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளின் இரட்டைத் தரநிலைகளை இதன்போது ஏற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஊழல், இனவாதம், மதத் தீவிரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் ஊழல் நிறைந்த பழைய அரசியல் கலாசாரம் மீண்டும் தலைதூக்குவது தடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இளைஞர் செயற்பாட்டாளர்கள் வீதி நாடகமொன்றை அரங்கேற்றியமையுடன், சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




