பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி! : கஜேந்திரகுமார் எம்.பி. சாடல்
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத் தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்தபோது, அந்தக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ராஜ் சோமதேவா செயற்பட்டார்.
ராஜ் சோமதேவா ஒரு சிங்கள, பௌத்த தேசியவாதி ஆவார். இவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இயங்குகின்றார் என்பது தற்போதைய அவரின் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.
உள்ளக விசாரணைகள் உண்மைகளை ஒருபோதும் வெளிப்படுத்தாது. அரசு நேர்மையாகச் செயற்பட விரும்புகின்றது என்றால், சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும்.”
- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவா தனது அறிக்கையின் 17ஆவது பக்கத்தில், சுகாதார விபத்து காரணமாகக் கணிசமான நபர்கள் உயிரிழந்து புதைக்கப்பட்டுள்ளமையுடன் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி ஒத்துப்போவதாகவும், அதனை நிராகரிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லை என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதே பந்தியில், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உடல்கள் தொடர்பில் நிபுணத்துவ குறைபாடுகள் காரணமாக இன்னும் எத்தனையோ விடயங்கள் செய்ய வேண்டியுள்ள காரணத்தால் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவுகளை அறிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுவிட்டு, சுகாதார விபத்தில் நடந்ததை போன்ற கருத்தையும் பதிவு செய்கின்றார். பேராசிரியர் ராஜ் சோமதேவா எந்த அடிப்படையில் தனது அறிக்கையில் இந்தக் கருத்துக்களைக் குறிப்பிட்டார்?
17 பக்கங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிட்ட விபத்து தொடர்பிலும் விபட்டை உறுதிப்படுத்தும் வகையிலும் ஆதாரங்கள் எதனையும் சமர்ப்பிக்காமல், முடிவுக்கு வர முடியாது என்று கூறிக்கொண்டு, குறிப்பிட்ட விடயத்தை அழுத்திக் கூறும் வகையில் குறிப்பிட்டுள்ளார் என்றால், அவரின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.
இதேவேளை, அவர் இதற்கு முன்னர் மூன்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர் தனது தனிப்பட்ட முடிவுகளை அவற்றில் குறிப்பிட்டுள்ளார். முதலாவது அறிக்கையில் பாரிய புதைகுழி என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இதற்கு முன்னர் செம்மணி தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியவாதத்தை எதிர்த்த தரப்புகளும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ராஜன் ஹுல் என்பவர் 1999ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், செம்மணியில் உடல்கள் ஆடைகள் இன்றிப் புதைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டு முகாம்களில் இருந்து கொண்டுசென்று செம்மணியில் புதைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், செம்மணி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்த் தேசியப் பேரவையின் நிலைப்பாடானது, தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவா என்பவர் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் இயங்குகின்றார் என்பதாகும். இதனை நாங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம். அவருடைய கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம்.
கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் தொடர்பான குழு அமைக்கப்பட்டபோது, பேராசிரியர் ராஜ் சோமதேவவையும் அதில் இணைத்திருந்தார். அவரொரு சிங்கள, பௌத்த தேசியவாதியாவார். அவர் ஒரு நிகழ்ச்சி நிரலில்தான் இயங்குகின்றார் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இந்த நாட்டுக்குள் நடத்த முடியாது என்பதனைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வருகின்றோம்.
இந்த அரசு நேர்மையாகச் செயற்பட விரும்புகின்றது என்றால், சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும். இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் தனித்துச் செய்யவில்லை. இதனால், சர்வதேச விசாரணைக்கு இணங்காமல் உண்மையைக்கண்டறிய முடியாது. இப்போதாவது அரசு கண்களைத் திறக்க வேண்டும்.
செம்மணியில் கிட்டத்தட்ட 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 600 உடல்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாரதூரமான குற்றம் நடந்துள்ள சம்பவத்தில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். அரசிடம் இனவாதம் இல்லை என நிரூபிப்பதென்றால், முன்னைய ஆட்சியாளர்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்பதனை நிரூபிப்பதாக இருந்தால், தயவுசெய்து இந்த விடயத்திலாவது சர்வதேச குற்றவியல் விசாரணையைத் தடுக்காமல் இதற்கு இணங்க வேண்டும்.” – என்றார்.

