சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புக்களை பட்டியலிட்டார் ரவிகரன் எம்.பி!
இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்கான நீதியும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு நாட்டையும் அரண்மனை வாழ்வையும் துறந்து ஞானம் கண்ட புத்தர் பெருமானின் சிலை தற்போது நில ஆக்கிரமிப்பின் அடையாளமாக பாவிக்கப்படுவதாகவும் தெரவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வெளிநாட்டு விருந்தினர்களுக்குரிய இராஜதந்திர மரியாதையை வலியுறுத்துகின்ற அதே உறுதியுடன், உள்நாட்டிலும் அனைத்து மக்களுக்கும் உரிய சமய மரியாதையையும் அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இராஜதந்திர நடைமுறைகளையும் சமய நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி 22.10.2026இன்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவால் முன்வைக்கப்பட்ட சபை உத்திவைப்புவேளையின்போதான பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போத அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்தையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
இராஜதந்திர நடைமுறைகளையும் சமய நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இப்பிரேரணையை முன்வைத்த கௌரவ திலித் ஜயவீர அவர்களின் முயற்சியை வரவேற்கிறேன்.
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை நாம் மதிக்கிறோம். வெளிநாட்டு உயர்மட்ட விருந்தினர் ஒருவர் சமய நிகழ்வுக்காக வருகைதந்தாலும், அவரது பதவிக்கும் வருகையின் தன்மைக்கும் உரிய இராஜதந்திர மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும்.
இவ்விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் என்ன? எங்கு குறைகள் ஏற்பட்டன என்பவை தொடர்பில் அரசாங்கம் இச்சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அதேவேளை, வெளிநாட்டு விருந்தினர்களுக்கான சமய மரியாதையை வலியுறுத்தும் இச்சபையில், உள்நாட்டில் எமது மக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
2019ஆம் ஆண்டில் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி, நூற்றுக்கணக்கான தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, பொலிசார், படையினர் உள்ளிட்ட அரச இயந்திரங்கள் குவிந்து பாதுகாப்பு வழங்க, சைவ மக்களின் புனித தீர்த்தக்கேணியோரம் பௌத்த பிக்குவின் உடலம் தகனம் செய்யப்பட்டது. அப்போது எமது மக்களின் சமய உணர்வுகளுக்கு வழங்கப்பட்ட மரியாதை என்ன?
படையினர் சூழ்ந்திருக்க குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் எமது மக்கள் வழிபட்டுவந்த சூலம் காணாமல் ஆக்கப்பட்டது.
வெடுக்குநாறி மலையில் எமது சமய அடையாளங்கள் சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டன. இவற்றுக்கான பொறுப்புக்கூறல் எங்கே!
இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரின் கதிiயும் இச்சபையில் நினைவுபடுத்துகின்றேன். அவருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிக்கொண்டுவரப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை.
சிங்கள பௌத்தர்கள் வாழாத முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியை ஆக்கிரமித்து விகாரை வலிந்து நிருமாணிக்கப்பட்டது. சைவ மக்கள் நிறைந்த வெட்டுவாய்க்கால் பகுதியிலும் வலிந்து விகாரை அமைக்கப்பட்டது. ஆக, இங்கு அமைக்கப்படும் விகாரைகள் வழிபடும் நோக்கத்துக்காக அன்றி, நில ஆக்கிரமிப்பு அடையாளங்களாக அமைக்கப்படுகின்றன.
நாட்டையும் அரண்மனை வாழ்வையும் துறந்து ஞானம் கண்ட புத்தர் பெருமானை, நில ஆக்கிரமிப்பின் அடையாளமாக எமது மக்கள் உணரும் நிலைக்கு கொண்டுவந்த கடந்த கால அரசியல் அணுகுமுறைகள் எவ்வளவு துயரமானவை!
இந்தத் தீவின் வருங்காலம் பல்வகைமையை மதித்துக் கொண்டாடுவதாக அமையவேண்டும். இன, மத நல்லிணக்கம் நடைமுறையிலும் வெளிப்படவேண்டும்.
வெளிநாட்டு விருந்தினர்களுக்குரிய இராஜதந்திர மரியாதையை வலியுறுத்துகின்ற அதே உறுதியுடன், உள்நாட்டிலும் அனைத்து மக்களுக்கும் உரிய சமய மரியாதையையும் அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி நிறைவுசெய்கிறேன் – என்றார்.

