மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதும் கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வது ஏன்? : சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி
மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதிலும் மற்றும் மாற்று நீர்மின் சக்தி உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
“கடந்த அரசில் மின்சார சபையானது மாபியாக்களிடம் சிக்கியுள்ளதாகவும், ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகவும், தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகவும் தற்போதைய அரசு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதும் கடந்த காலத்தைப் போலவே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மின் தடையும் நாள்தோறும் ஏற்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசு பதவியேற்றதுடன் மின்சாரத்துறை சில மாபியாக்களிடம் சிக்கியுள்ளது என்றும், அதிலிருந்து மின்சாரத்துறை விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறி அதனை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.
அவ்வாறு பிரிக்கப்பட்ட பிறகு, மின்சார உற்பத்தியிலும் விநியோகத்திலும் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்த அரசு பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நுகர்வோர் மீது சுமத்தப்பட்ட கட்டணங்கள் மிக இறுக்கமாக அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ப உற்பத்தியும் விநியோகமும் சரியாக உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல வேளைகளில் மின்சாரம் தடைப்படுகின்றது. இது சில வேளைகளில் நிமிடங்களாகவும், பல வேளைகளில் மணித்தியாலங்களாகவும் நீடிக்கின்றது.
இப்போது முழு இலங்கையிலும் மூன்று நாள்களுக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஒருபுறம் சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகமாக இருப்பதாகக் கூறி, இதனால் கட்டமைப்பு பாதிப்படைந்து மின்சாரம் தடைபடுவதாகக் கூறுபவர்கள், மறுபுறம் அவசர மின் உற்பத்திச் சாதனங்கள் பழுதடைந்ததால் மின்வெட்டைத் தவிர்க்க முடியவில்லை என முரணான தகவல்களை வெளியிடுகின்றனர்.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை தேசிய மின் உற்பத்தியுடன் சரியான முறையில் இணைப்பதற்கு உரிய தொழில்நுட்பமோ அல்லது உபகரணப் பற்றாக்குறையோ இவர்களுக்கு உள்ளதா? மழைக்காலத்தில் நீர்மின் உற்பத்தி பெரிய அளவில் கிடைக்கக்கூடிய சூழலில் மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் என்ன?
உலக நாடுகளில் இரண்டு நிமிடம் மின்சாரம் தடைப்பட்டாலே அது பெரிய பேசுபொருளாக மாறிவிடுகின்றது. ஆனால் இலங்கையில் பல முறை மின்சாரம் தடைபடுவது ஒரு அன்றாடச் செயல்பாடாக மாறிவிட்டது.
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மின்சார உற்பத்தி தடைபடுவதானது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் பல மணி நேரம் பின்னோக்கி நகர்த்துகின்றது.
எனவே, அரசு இந்தத் தடைகளைக் கவனத்தில் கொண்டு மின் கட்டணத்தைச் சீரமைத்துத் தடையற்ற மின்சாரத்தை வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.” – என்றுள்ளது.

