நீர் வழித்தடத் தடையினால் மக்கள் அவதி.!
நுவரெலியா நகரப் பகுதியில், கார்லி பேக் சந்தியை அண்மித்த இடத்தில் ஏற்பட்டுள்ள நீர் வழித்தடத் தடையினால் பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2026 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட டித்வா புயலின் போது இப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் அதன் பின்னர் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டு வரும் அனர்த்தம் காரணமாக இப் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என்ற கவலை மக்களிடையே காணப்படுகின்றது.
குறிப்பாக, இப்பகுதியில் வாழும் பெருந்தோட்ட மக்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை வெள்ள நீர் தேங்குதல் மற்றும் வெள்ளப்பெருக்கு மக்களின் வீடுகள், உடைமைகள், போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இப்பிரச்சினையை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுவரெலியா செல்லும் குறுக்கு வழியான ரதல்ல வழியாக செல்லும் போது கார்லி பேக் சந்திப் பகுதியில் உள்ள ஆற்றில் ஒரு பகுதியில் அவ் வீதி செப்பனிடப்பட்ட வேளையில் அங்கு வெட்டப்பட்ட மண்ணை கொண்டு நிரப்பப்பட்டு அப் பகுதியில் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்த ஆறு குறுகியதால் தற்போது பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்து பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் நீர் வழித்தடம் தடைப்பட்டுள்ளமையே.
இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்துதல். நீர் வழித்தடம் தடைப்படுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதனைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஏனைய பொறுப்பான அதிகாரிகள் இணைந்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் வேண்டும்.
இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எதிர்காலத்தில் வெள்ளம் அல்லது நீர் தேங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


