ஈ.பி.டி.பி. மீதான நடவடிக்கைகள் வரவேற்க வேண்டியவை – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஈ.பி.டி.பி. க்கு எதிராக காலத்துக்கு காலம் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.
இதற்கு அண்மைய உதாரணமாக செம்மணி எலும்புக் கூடுகள் தொடர்பாக, பேராசிரியர் ராஜ்சோமதேவ வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையும் அமைந்திருக்கின்றது என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,
தற்போது ஈ.பி.டி.பி. அலுவலகங்கள் மீது முன்னெடுக்கின்ற சோதனைகளும் எம்மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து எம்மை விடுவிக்கும் நகர்வுகளாகவே இருக்கும்.
அந்தவகையில் இவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கப்படவேண்டியவை என்றும் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வேலணை பிரதேசத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட செயலாளர் நாயகம் –
குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் எமது இரண்டு அலுவலகங்கள் குறிப்பாக முதலில் யாழ் அலுவலகமும், அதன் பின்னர் ஊர்காவற்றுறை அலுவலகமும் சோதனையிடப்பட்டுள்ளன. இவற்றை நாம் வரவேற்கின்றோம்.
இதேநேரம் இவ்வாறான விடயங்கள் எதிர்பார்க்கப்பட வேண்டியவைதான்.
மறுபுறம், எம்மீது பலவகையான குற்றச்சாட்டுக்கள் பலதரப்பினரால் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இவற்றை விசாரிக்குமாறு இன்றைய ஜனாதிபதிக்கு நாம் எழுத்து மூலம் கோரிக்கையும் விடுத்திருக்கின்றோம்.
செம்மணியில் தோண்டப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
தற்போது, அவற்றை ஆய்வு செய்து வருகின்ற பேராசிரியரின் இடைக்கால அறிக்கையில், தொற்றுநோய் பரவல் அல்லது இயற்கை பேரிடர் காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புக்களாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே, செம்மணிப் பகுதியில் இளைஞர் யுவதிகள் காணாமல் போவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக வெளிவந்த நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களே எம்மால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எமது முயற்சியினாலேயே, அக்கால கட்டத்தில் காணாமல் போதல் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
மறுபுறம் மட்டக்களப்பு குருக்கள் மடம் புதைகுழியின் உண்மைகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றது.
இந்த உண்மையை மறைத்து எமக்கு எதிரான விர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே பேராசிராசியரின் இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது.
இதேபோன்று பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும்.
ஆகவே, எமக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக பதற்றம் அடையாமல், எமது அரசியல் வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.
எங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பவற்றை முடிந்தளவு நிறைவேற்றுவதற்கு உழைக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்




