உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளால் வடபகுதி மீனவர்கள் வறுமை நிலையில் உள்ளனர்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
118 பார்வைகள்

வடபகுதியில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பெரும் செல்வந்தர்களாகவும், பாரம்பரிய மீனவர்கள் பட்டினிச்சாவுக்கு செல்லும் அளவுக்கு வறுமை நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடபகுதி கடற்பரப்பில் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ள இறால்படுகையில் வடபகுதி மீனவர்களுக்கு சொற்ப வருவாயேனும் கிடைக்கவேண்டுமெனில் எல்லைதாண்டி வரும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரங்களையும், கருவிகளையும் வடபகுதி மீனவர்களுக்கு வழங்குமாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவ்வாறு கட்டுப்படுத்தும் அதிகாரங்களும், கருவிகளும் கையளிக்கப்பட்டால் வடபகுதி மீனவர்கள் ஒரு மாதத்திற்குள் அவற்றை கட்டுப்படுத்துவார்கள் எனவும், கடந்தகாலத்தில் நாங்கள் எவ்வாறு வார்க்கப்பட்டோம், வளர்க்கப்பட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டிவிடுவோம் எனவும் சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் 20.10.2026 இன்று இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திலே, தீவளாவிய வகையிலும் அவற்றுக்கு மேலாக வன்னி மக்கள் எதிர்கொள்ளும் சமத்துவ நிலைக்குச் சவாலாகும் காரணிகள் தொடர்பிலும் இப்பேரவையில் வெளிப்படுத்தவும் இடர்களையும் தீர்வு கோரியும் இன்றைய எனது நேரத்தை இப்பேரவையில் பயன்படுத்த விளைகிறேன்.

முல்லைத்தீவு அடங்கலான வன்னிப் பெருநிலப்பரப்பு தீவளாவிய சவால்களோடு தீவளாவிய சமத்துவ நிலையிலும் பின்தங்கி மேலும் சவால்களை எதிர்கொள்கிறது.

2025ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீன் உற்பத்தி 8220.49 மெற்றிக் தொன் என அரசதரப்பு புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

வெளியுலகுக்குச் செல்லும் இவ்வாறான புள்ளிவிபரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் இத்தகைய மீன் உற்பத்தியால் மீனவர்களின் வாழ்வாதாரம் வலுவாக உள்ளது என்ற செய்தி தவறாகவே செல்லும் நிலை காணப்படுகிறது.

ஒருபுறம் முல்லைத்தீவின் பெரும்பகுதி கடற்கரை வெறிச்சோடிப்போய் இருக்க, பாரம்பரிய மீனவர்கள் வாழ்வாதார வலு நலிவுற்று வறுமைப்பட்டிருக்க, அரச தரப்பில் வெளிவரும் இத்தகைய புள்ளிவிபரத்தில் உலகுக்கு தவறான செய்தியையே வெளிப்படுத்தி நிற்கிறது.

இவ்வாறான புள்ளிவிபர மீன் உற்பத்தியால் மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்பவர்கள், முல்லைத்தீவில் சட்டவிரோத தொழில்முறைகளால் மீன்பிடிப்பவர்களே!
மீன்பிடித்துறையிலும் டிஜிட்டல் முறையை செயற்படுத்தி ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட மீனவரிடம் இருந்தும், மீன்பிடித் துறைகளில் இருந்தும் பிடிபடும் மீன் அளவை கணக்கிடும் போதே, இத்தகைய மீன் உற்பத்தி ஒட்டுமொத்த முல்லைத்தீவு மாவட்டத்தையும் பிரதிபலிக்கின்றதா என்பதை கடற்றொழில் அமைச்சு உறுதிப்படுத்தமுடியும்.

வெறிச்சோடிப்போய் இருந்த முல்லைத்தீவு மாவட்டக் கடற்கரையை கடந்த கிழமையும் நேரில் சென்று நான் பார்வையிட்டிருந்தேன். முல்லைத்தீவின் கடற்பரப்பில் மட்டுமல்ல வடமாகாணக் கடற்பரப்பு முழுவதும் இவ்வாறான சட்டவிரோத தொழில் முறைகளாலேயே அதிகளவான மீன்கள் பிடிபடுகின்றன.

சட்டவிரோதிகள் பெரும் செல்வந்தர்களாவதையும் பாரம்பரிய மீனவர்கள் பட்டினிச்சாவுக்கு செல்லும் அளவுக்கு வறுமைப்படுவதையுமே தற்போதைய கடற்றொழில் அமைச்சும் கடற்படையும் கடந்த ஈராண்டுகாலத்தில் வடகடலில் சாதித்தவை.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலக புள்ளிவிபரத்துக்கு அமைவாக, சட்டவிரோத தொழில்முறைகள் தொடர்பில் முல்லைத்தீவில் 2025 ஆம் ஆண்டில் 136 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து தண்டப்பணமாக 7.1மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில், 53 மீனவர் கைது செய்யப்பட்டு 1.28மில்லியன் நிதி தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
சராசரியாக 2025 இல் மூன்று நாளுக்கு ஒரு கைது என்ற அடிப்படையிலும் 2026 இல் ஐந்து நாளுக்கு ஒரு கைது என்ற அடிப்படையிலும் கடற்றொழில் அமைச்சு சட்டவிரோதிகளை மிகவும் மெத்தனப்போக்கில் அணுகியுள்ளது.

ஒரு சட்டவிரோத தொழிலில் ஒரு நாள் மீன்பிடியில் அவர்கள் உழைக்கும் பணத்திலும் சிறிய அளவிலான தொகையே ஒரு வழக்கிற்குரிய தண்டப்பணமாகும் போது, சட்டவிரோதிகள் எவ்வாறு சட்டவிரோத தொழிலை நிறுத்தப்போகிறார்கள். திருந்தப்போகிறார்கள்.

சட்டவிரோத தொழில் முறைகள் ஊடாக, நூற்றுக்கணக்கான கிலோ மீன்களை ஒவ்வொரு தடவையும் பிடிக்கும் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு இவ்வாறான தண்டப்பணமும் தண்டனையும் போதுமானதா?

சட்டவிரோத தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் இறுக்கமான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டத்திருத்தங்களை அரசு கொண்டு வருதல் வேண்டும்.

வான்பரப்பிலும் கடலிலும் நிலத்திலுமாக போதையை கட்டுப்படுத்தும் அரசு அதே அளவு சிரத்தையை கடலில் நடைபெறும் இத்தகைய சட்டவிரோத தொழில் முறையை முற்றாக ஒழிப்பதிலும் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், கடந்த கிழமையும் எமது மாவட்ட மீனவர்களால் எமது கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடிப்பதை சான்றுப்படுத்தியுள்ளார்கள். அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ள இறால்படுகையில் எங்களது மீனவர்களுக்கு சொற்ப வருவாயேனும் கிடைக்கவேண்டும் என்றால் இவ்வாறாக எல்லைதாண்டி வரும் இந்திய இழுவைப்படகுகளையும் கட்டுப்படுத்தவேண்டும்.

இப்பேரவையில் முன்னரே நான் பதிவு செய்திருக்கிறேன். மீண்டும் சவாலாகவே சொல்கிறேன். வடகடல் பரப்பை முழுமையாக கட்டுப்படுத்த கடற்படையால் இயலாவிட்டால், சட்டவிரோத தொழில்முறைகளையும் இந்திய இழுவைப்படகுகளையும் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சால் இயலாவிட்டால், அதிகாரங்களையும் கருவிகளையும் எங்கள் மீனவர்கள் வரை பரவலாக்குங்கள். ஒரு மாதத்திற்குள் இவற்றை கட்டுப்படுத்திக் காட்டுகிறோம். கடந்தகாலத்தில் நாங்கள் எவ்வாறு வார்க்கப்பட்டோம் வளர்க்கப்பட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டிவிடுகிறோம் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0