உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுற்றுலா வளர்ச்சி வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
109 பார்வைகள்

“சுற்றுலாவிகளின் வருகை அதிகரிப்பதுடன், வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரமும் வருமானமும் உயர வேண்டும். இதுவே சுற்றுலாத்துறை வளர்ச்சியின் உண்மையான பயனாக அமைய வேண்டும்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ‘இந்திய – இலங்கை சுற்றுலா இணைப்பு’ என்ற தொனிப்பொருளிலான சுற்றுலாத்துறை வர்த்தக சந்திப்பு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் ‘ஸ்கை டூரிசம்’ நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாத்துறைப் பிரதிநிதிகள், சுற்றுலா இயக்குநர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர் சுற்றுலாத்துறைத் தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மொழி, மதம், பண்பாடு, குடும்ப உறவுகள் மற்றும் வரலாறு சார்ந்த தொடர்புகள் பல நூற்றாண்டுகளாக நிலவுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இந்தத் தொன்மையான உறவுகளைச் சுற்றுலாத்துறையின் ஊடாகப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்றுவதற்கான காலம் இது என்றும் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம், செல்வச்சந்நிதி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், தீவுகளுக்கான பயணங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு வகைகளை ஒருங்கிணைத்து, இந்தியச் சுற்றுலாவிகளைக் கவரக்கூடிய சிறப்பான சுற்றுலாப் பொதிகளை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தையும், நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கடல் போக்குவரத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, இந்தியச் சுற்றுலாவிகள் வடக்கு மாகாணத்தில் பல நாட்கள் தங்கிச் சுற்றிப்பார்க்கக்கூடிய பயணத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் எந்த வகையான சுற்றுலாப் பொதிகளுக்கு வரவேற்பு உள்ளது, சுற்றுலாவிகள் எத்தனை நாட்கள் தங்க விரும்புகின்றனர், போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் வழிகாட்டல் சேவைகளை எவ்வாறு சிறப்பாக ஒருங்கிணைக்கலாம் என்பன தொடர்பில் இந்தியப் பிரதிநிதிகளின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

கலந்துரையாடல்களுடன் மட்டும் நின்றுவிடாமல், நடைமுறைக்கு ஏற்ற சுற்றுலாப் பொதிகளை உருவாக்குதல், அவற்றைச் சந்தைப்படுத்துதல் மற்றும் இந்தியச் சுற்றுலா முகமைகளுக்கும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைத் தொழில் முயற்சியாளர்களுக்கும் இடையில் நேரடி வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் சார்பில் துணைத் தூதுவரும் அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் தகவல் பிரிவுகளுக்குப் பொறுப்பானவரும் தூதரக அலுவலகத் தலைவருமான ஸ்ரீ சங்கரன் ராஜகோபாலன், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன், தென்தமிழக சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், இந்தியச் சுற்றுலாத்துறைப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் சுற்றுலாத்துறைத் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

150 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

140 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

133 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0